
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று டப்ளினில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஆண்ட்ரூ பால்பிர்னி 112 ரன்களையும், ஹாரி டெக்டர் 56 ரன்களையும், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 53 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 303 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 55 ரன்களையும், மேத்யூ ஃபோர்ட் 38 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.