
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார்.
இதனையடுத்து பாபர் அசாம்- சகீல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 30 ரன்களை மட்டுமெ எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.