
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா, இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்.
மேலும் இந்திய அணிக்காக கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகமான பியூஷ் சாவ்லா இதுநாள் வரை 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரை 192 போட்டிகளில் விளையாடியுள்ள சாவ்லா 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இரண்டு முறை 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அதேசமயம் இவர் இந்திய அணிக்காக கடந்த 2012ஆம் ஆண்டு கடைசியாக விளையாடிய நிலையில், இளம் வீரர்களின் வருகையால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன்பின் அவரால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. இருப்பினும் ஐபிஎல் தொடரை பொறுத்தமட்டில் காடந்த சீசன் வரை தொடர்ந்து விளையாடிய அவர் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையிலும் முதல் 5 இடங்களுக்குள் உள்ளார்.