இந்த போட்டியில் நான் எதுவும் ஸ்பெஷலாக செய்யவில்லை - மோஹித் சர்மா!
எப்பொழுதுமே நான் ஒவ்வொரு போட்டிக்காகவும் விளையாட வரும்போது என்னுடைய பலம் என்னவோ அதில் மட்டுமே தான் கவனம் செலுத்துவேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹித் சர்மா தெரிவித்துள்ளர்.
ஐபிஎல் தொடரில் நேற்றைய நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் 7 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
இதில் 15 ஓவரில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிபெற 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், இறுதிகட்டத்தில் லக்னோ கேப்டன் கேஎல் ராகுலின் பொறுமையான ஆட்டத்தால் லக்னோ அணியின் ரன்வேகம் குறைந்தது. 15ஆவது ஓவர் முதல் 19ஆவது ஓவர் வரை 5 ஓவர்களுக்கு லக்னோ வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Trending
கடைசி ஓவரில் வெற்றிபெற 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மோகித் சர்மாவின் அசத்தலான பந்துவீச்சாள் லக்னோ அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 7 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த போட்டியின் போது 20-ஆவது ஓவரை வீசிய குஜராத் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான மோகித் சர்மா அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமின்றி 2 ரன்அவுட்டுகளுக்கும் காரணமாக திகழ்ந்தார்.
மொத்தத்தில் கடைசி ஓவரில் நான்கு விக்கெட்டுகள் விழ போட்டியில் குஜராத் அணி வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மூன்று ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது அசத்தலான செயல்பாடு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய மோஹித் சர்மா, “இந்த போட்டியில் நான் எதுவும் ஸ்பெஷலாக செய்யவில்லை. வழக்கமாக நான் எவ்வாறு வீசுவானோ அதே போன்று தான் பந்து வீசினேன். எப்பொழுதுமே நான் ஒவ்வொரு போட்டிக்காகவும் விளையாட வரும்போது என்னுடைய பலம் என்னவோ அதில் மட்டுமே தான் கவனம் செலுத்துவேன்.
பயிற்சியில் நான் எதை எதை முயற்சி செய்கிறேனோ அதனை போட்டியில் கொண்டு வருவேன் அந்த வகையில் இந்த போட்டியிலும் என்னுடைய திட்டம் எல்லாம் தெளிவாக இருந்தது. புதிதாக எதையும் யோசிக்காமல் என்னுடைய பலம் என்ன என்பதை மட்டுமே யோசித்து பந்து வீசினேன். அந்த வகையில் இறுதியில் வெற்றியும் கிடைத்ததில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்
Win Big, Make Your Cricket Tales Now