நாங்கள் சில தருணங்களில் நன்றாக செயல்பட்டோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இப்போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக துவங்காமல் இங்கிலாந்தை நழுவ விட்டு விட்டோம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்கார்ட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனே நகரில் நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தங்களுடைய 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் சதமடித்து 108, டேவிட் மாலன் 87 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் 339/9 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத் தொடர்ந்து 340 ரன்களை துரத்திய நெதர்லாந்து சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 37.2 ஓவரில் 179 ரன்களுக்கு ஆளவட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமனரு 41* ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி மற்றும் அடில் ரசித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
Trending
இதன்மூலம் ஏற்கனவே இத்தொடரிலிருந்து வெளியேறிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 2ஆவது வெற்றியை பதிவு செய்து 2025 சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் 6ஆவது தோல்வியை பதிவு செய்த நெதர்லாந்து இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. இருப்பினும் தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணியை தோற்கடித்த அந்த அணி இப்போட்டி உட்பட பெரும்பாலான போட்டிகளில் சில தருணங்களில் அபாரமாக செயல்பட்டது.
ஆனாலும் அதை அப்படியே பிடித்து தொடர்ந்து அசத்த தவறியதன் காரணமாக நெதர்லாந்து சில வெற்றிகளை நெருங்கி வந்தும் நழுவ விட்டது. அந்த வகையில் சிறப்பாக இத்தொடரில் விளையாடியதாக வர்ணனையாளர் தெரிவித்ததற்கு நன்றி சொன்ன நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் திருப்புமுனை ஏற்படும் தருணங்களை தங்களுடைய அணி அதிகமாக பயன்படுத்தினால் வருங்காலங்களில் நிறைய வெற்றிகளை பெற முடியும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக துவங்காமல் இங்கிலாந்தை நழுவ விட்டு விட்டோம். அதன் பின் பவுலர்கள் அவர்களை இழுத்து பிடித்தும் மீண்டும் அவர்கள் கடைசியில் சராசரிக்கும் அதிகமான ரன்கள் அடித்து விட்டார்கள். அதைத்தொடர்ந்து பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு அதே பழைய கதையை நாங்கள் அரங்கேற்றினோம். அவர்களை 43 ஓவர் வரை நாங்கள் கட்டுப்படுத்தியிருந்தோம்.
ஒருவேளை நாங்கள் இன்னும் சில வித்தியாசமான திட்டங்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். இருப்பினும் அதையும் தாண்டி சிறப்பாக பேட்டிங் செய்த இங்கிலாந்துக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். 340 ரன்களை வருங்காலங்களில் அடிப்பதற்கு நாங்கள் தேவையான சமநிலையை கண்டறிய வேண்டும். நீங்கள் சொன்னது போல நாங்கள் சில தருணங்களில் நன்றாக செயல்பட்டோம். அதை அதிக நேரம் செய்ய வேண்டும். பெங்களூருவில் அற்புதமான சூழ்நிலையில் நடைபெறும் அடுத்த போட்டியை (இந்தியாவுக்கு எதிராக) எங்களுடைய வீரர்கள் எதிர்நோக்குகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now