சூர்யகுமாருக்கு பவுலிங் செய்ய வேண்டும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - ஹர்திக் பாண்டியா!
நான் மட்டும் சூரியகுமார் யாதவிற்கு பந்துவீச்சாளராக இருந்திருந்தால், என் மனதே உடைந்திருக்கும் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகள் விளையாடிய கடைசி டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றார் போல, சூரியகுமார் யாதவ் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்து, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார்.
சூரியகுமார்-க்கு முன்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 35 ரன்கள் அடித்து நல்ல டெம்போ செட் செய்தார். கடைசியில் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 21 ரன்களை வெறும் 9 பந்துகளில் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 228/5 ரன்கள் அடித்திருந்தது.
Trending
ராஜ்கோட் மைதானத்தில் 229 ரன்கள் இலக்கு என்பது சைஸ் செய்யக்கூடியது தான். ஆகையால் நம்பிக்கையுடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இலங்கை பேட்ஸ்மென்கள் குஷால் மெண்டிஸ் 23 ரன்கள், தனஞ்செய டி சில்வா 22 ரன்கள் மற்றும் கேப்டன் சனக்கா 23 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.
மற்ற இலங்கை வீரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. அவர்களும் சொற்பரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆகினர். இறுதியில் 137 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது.
போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா கூறுகையில், “ஒவ்வொரு போட்டியிலும் தனது பேட்டிங் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, பேட்டிங் என்பது மிகவும் எளிது என மறைமுகமாக கூறுகிறார் சூரியகுமார் யாதவ். இந்த ஃபார்மில் இருக்கும் அவருக்கு நான் மட்டும் பௌலிங் வீசி இருந்தால், என் மனதே உடைந்திருக்கும். அவருக்கு பவுலிங் செய்ய வேண்டும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
இந்த நேரத்தில் ராகுல் திரிப்பாதியை குறிப்பிட்டு நான் பாராட்ட வேண்டும். நல்ல டெம்போ செட் செய்தார். அதேநேரம் அக்சர் பட்டேல் போன்ற ஆல்ரவுண்டர் எனது அணியில் இருப்பதை நினைத்து நான் பெருமையாக கருதுகிறேன். அணிக்கு தேவையான நேரத்தில் ரன்களையும் விக்கெட்டுகளையும் எடுத்துக் கொடுக்கிறார்.
கேப்டனாக இருக்கும் எனக்கு ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான். என் அணியில் இருக்கும் வீரர்களை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது. போதியவரை அவர்களை அணிக்குள் வைத்திருந்து பாதுகாக்க வேண்டும். அனைவருமே உலகத்தரம் மிக்க டி20 வீரர்கள். ஒரு சில போட்டிகள் தவறு நேர்வது இயல்பு.
என்னை பொறுத்தவரை, இந்த தொடரில் இந்திய வீரர்கள் காட்டியது 50 சதவீதம் கூட இல்லை என்பதை நான் உறுதியாக கூறுவேன். இன்னும் கடினமான போட்டியை கூட வெல்லும் அளவிற்கு திறமையான வீரர்கள் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்..
Win Big, Make Your Cricket Tales Now