
ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதில் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்த தொடரில் ஆரம்பம் முதலே பேட்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இப்போட்டியிலும் சிறப்பாக செயல்பாடுகள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த கடுமையான விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கி பார்முக்கு திரும்பிய விராட் கோலி அதே புத்துணர்ச்சியுடன் இந்த உலகக் கோப்பையில் 246* ரன்களை குவித்து அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கதை முடிந்ததாக கருதப்பட்ட இந்தியாவுக்கு வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் உலக சாதனை படைத்துள்ளார். அதை விட இந்த அற்புதமான செயல்பாடுகளால் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக இதே உலகக் கோப்பையிலிருந்து மனசாட்சியின்றி நன்றியை மறந்து நீக்க சொன்ன அதே முன்னாள் இந்திய வீரர்களை கைதட்டி பாராட்ட வைத்துள்ள விராட் கோலி தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.