டி20 உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; ரஸ்ஸல், நரைன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல டி20 வீரர்களான ரஸ்ஸல், சுனில் நரைன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 போட்டிகள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.
Trending
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 பிரபலங்களான ரஸ்ஸல், சுனில் நரைன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அறிமுக வீரரும் சுழற்பந்துவீச்சாளருமான யானிக் கரியா இந்த அணியில் தேர்வாகியுள்ளார். மற்றொரு அறிமுக வீரரும் ஆல்ரவுண்டருமான ரேமன் ரீஃபருக்கும் இந்த அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கையைப் போல வெஸ்ட் இண்டீஸ் அணியும் தகுதிச்சுற்றில் விளையாடி அதில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் பிரதான சுற்றில் இடம்பெற முடியும். 2012, 2016 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2021 நவம்பர் 15 அன்று தரவரிசையின் அடிப்படையில் 10ஆவது இடத்தில் இருந்தது. முதல் 8 இடங்களில் இல்லாத காரணத்தால் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் 21 வரை நடைபெறும் முதல் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நமிபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகள் போட்டியிடவுள்ளன. இந்த 8 அணிகளில் இருந்து 4 அணிகள் பிரதான சுற்றுக்குத் தேர்வாகும்.
பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் அணி: நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல் (துணை கேப்டன்), யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹுசைன், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஒபட் மெகாய், ரேமன் ரீஃபர், ஓடியன் ஸ்மித்.
Win Big, Make Your Cricket Tales Now