ஆஸ்திரேலியா ஏ மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணியானது ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் துருவ் ஜுரெல் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடியதுடன் அதிகபட்சமாக 80 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய ஏ அணியானது 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணியானது மார்கஸ் ஹாரிஸின் அரைசதத்தின் மூலம் 223 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணியின் நட்சத்திர வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் இப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 62 ர்னகளில் ஆட்டமிழக்க, தனுஷ் கோட்டியான் 44 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.