
நடப்பாண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதில் நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தாலும், ஷஷ்வத் ராவத்தின் சதத்தாலும், ஆவேஷ் கானின் அரைசதத்தின் மூலமும் முதல் இன்னிங்ஸில் 297 ரன்களைச் சேர்த்தது. இதில் ஷஷ்வத் ராவத் 124 ரன்களையும், ஆவேஷ் கான் 51 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இந்தியா சி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஜயகுமார் வைஷாக் 4 விக்கெட்டுகளையும், அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகளையும், கௌரவ் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா சி அணியில் அபிஷேக் போரல் 82 ரன்களையும், புல்கிட் நாரங் 41 ரன்களையும், பாபா இந்திரஜித் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்தியா சி அணியானது முதல் இன்னிங்ஸில் 234 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்தியா ஏ அணி தரப்பில் ஆவேஷ் கான், ஆகிப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 63 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.