
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார். புதிய பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வதில் வல்லவரான இவர், இந்தியாவுக்காக 6 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி, 112 விக்கெட்டுகளை கைப்பற்றியவர்.
கடந்த 2007-2008 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி தொடரை இந்தியா வென்றதில் முக்கிய பங்கு வகித்தார் இவர். 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், ரியல் எஸ்டேட் வியாபாரம் மற்றும் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் பயணித்த கார், மீரட் பகுதியில் நேற்று விபத்தில் சிக்கியிருந்தது பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று இரவு நடந்த அந்த பெரும் விபத்தில் பிரவீன் குமாருடன் அவருடைய மகனும் இருந்துள்ளார். பிரவீன் குமார் சென்ற சொகுசு கார், பாண்டவ நகர் பகுதியில் இருந்து திரும்பியபோது வேகமாக வந்த டிரக் அதனுடன் மோதியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் பெரிய காயங்கள் இன்றி தந்தை மற்றும் மகன் இருவரும் நூலிழையில் உயிர்தப்பினர்.