
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா பயணித்துள்ளது.
அதனால் பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 250 ரன்களை துரத்தும்போது கேப்டன் தவான், கில், ருதுராஜ், இஷான் கிசான் ஆகிய டாப் 4 பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி 51/4 என்ற மோசமான தொடக்கத்தை கொடுத்தது தோல்வியை பரிசளித்தது.
ஏனெனில் அதன்பின் ஸ்ரேயஸ் ஐயர் 50, ஷார்துல் தாகூர் 33, சஞ்சு சாம்சன் 86* என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடுமையாக போராடியும் இந்தியா வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் இந்த தொடரில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து நிறைய ரன்களை குவித்தும் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நட்சத்திர இளம் அதிரடி தொடக்க வீரர் பிரிதிவி ஷா சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.