ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடருக்கான ஏற்பாடுகளில் அனைத்து அணிகளும் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
ஒரு சில வீரர்கள் மட்டும் பயிற்சி முகாமிற்கு செல்லாமல் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தனர். ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், தீபக் சஹார், ருதுராஜ் கெயிக்வாட், உள்ளிட்ட பல இந்திய அணி வீரர்களும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடுமையான நிபந்தனை இருந்தது. எனினும் அவர் தேர்ச்சி பெற்று அசத்தினார்.
இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா மட்டும் யோ யோ டெஸ்டில் மோசமாக செயல்பட்டுள்ளார். ஒவ்வொரு வீரரும் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 16.5 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால் பிரித்வி ஷா 15 மதிப்பெண்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்க முடியாத சூழல் உருவானது.