
இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் மும்பை மற்றும் அசாம் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அசாம் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 687 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதில், தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி முதல் நாளில் மட்டும் 240 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து இன்று நடைபெற்ற 2ஆம் நாளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கூடுதலாக 139 ரன்கள் சேர்த்து மொத்தமாக 379 ரன்கள் குவித்துள்ளார்.
இப்போட்டி மொத்தம் 383 பந்துகளை சந்தித்த அவர், 4 சிக்சர்கள், 49 பவுண்டரிகள் உள்பட 379 ரன்கள் குவித்து 21 ரன்களில் 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். அவருக்கு துணையாக கேப்டன் ரஹானே தனது பங்கிற்கு 302 பந்துகளில் 15 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 191 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.