
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேசமயம் இத்தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்து ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. முன்னதாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 13 சீசன்கள் வழிநடத்திய மகேந்திர சிங் தோனி, அதில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார்.
இந்நிலையில் தற்சமயம் 42 வயதை எட்டியுள்ள தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியது, இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவியை வழங்கி இருந்தார். இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடருடன் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல்களும் வெளியாகினர். ஆனால் கடந்த ஆண்டே தன்னுடைய கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று தோனி கூறியிருந்த நிலையில், இந்த சீசனில் அது நடக்கவில்லை. ஒருவேளை இந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தால் நிச்சயம் தோனி ஓய்வை அறிவித்திருப்பார்.
அனால் தற்போது அது நடைபெறாத நிலையில், மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிப்பாரா அல்லது மேலும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடிவருதால் தான் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.