-mdl.jpg)
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2024 ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் மற்று வீராங்கனைக்கான வளர்ந்துவரும் வீரர் விருதை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி 2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார். 2024ஆம் ஆண்டில் கமிந்து மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 1,451 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 1049 ரன்களை அடித்துள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படித்துள்ளார். இதுதவிர்த்து கடந்த 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் அணியிலும் கமிந்து மெண்டிஸ் இடம்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.