
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீசு அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து ஸோர்ஸியுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். அதான்பின் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களுடைய முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்தும் அசத்தினர்.
அதன்பின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால்தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஸோர்ஸி 141 ரன்களுடனும், பெட்டிங்ஹாம் 28 ரன்களுடனும் தொடந்தனர். இருவரும் இணைந்து இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. இதில் டேவிட் பெட்டிங்ஹாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 59 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியான் திரும்பினார்.