பிஎஸ்எல் 2021: பயிற்சியின் போது விபரீதம்; மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அதிரடி வீரர்!
லாகூர் கலந்தர்ஸ் அணி வீரர் பென் டங்க் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவில் 2008 முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதை போல, பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) டி 20 லீக் போட்டிகள், நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் தொடங்கிய இத்தொடரின் 6 ஆவது சீசன், கரோனா பரவல் காரணமாக, பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகின்றது.
இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டி இரவு 9.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறுகிறது.
இந்நிலையில் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் பென் டங்க் (Ben Dunk) விளையாடி வருகிறார். அந்த அணியின் விக்கெட் கீப்பரான பென் டங்க், பேட்டிங்கிலும் சிறப்பான பங்கை ஆற்றி வருகிறார். இதனிடையே, பயிற்சியில் ஈடுபட்டிருந்த பென் டங்க் தன்னிடம் வந்த பந்தை தவற விட, அது அவரது முகத்தில்பட்டு காயமடைந்துள்ளார்.
அதிகமாக, ரத்தம் வழிந்த நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏழு தையல்களும் போடப்பட்டுள்ளது. காயம் சற்று அதிகமாக உள்ள காரணத்தினால், அவர் தொடக்கத்தில் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now