
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அப்துலா ஷஃபிக் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - காம்ரன் குலாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஃபகர் ஸமான் அரைசதம் கடந்து அசத்த, மறுமுனையில் 41 ரன்களில் குலாம் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ், ஃபகர் ஸமானுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்த ஃபகர் ஸமான் 50 பந்துகளில் சதமடித்தது, இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.