
பாகிஸ்தானின் டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்பொட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு முகமது ரிஸ்வான் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிஸ்வான் 11 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த மாலன் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
பின்னர் 52 ரன்களில் டேவிட் மாலன் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரீஸா ஹென்றி 79 ரன்களையும், குஷ்டில் ஷா 28 ரன்களையும் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. கராச்சி அணி தரப்பில் மிர் ஹம்சா, டேனியல் சம்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.