
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து முல்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - யசிர் கான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த யசிர் கான் 33 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் முகமது ரிஸ்வானும் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த உஸ்மான் கான் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் சார்லஸ் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஃப்திகார் அஹ்மதும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த உஸ்மான் கான் அபார அட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து மிரட்டினார். இத்தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும்.