பிஎஸ்எல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் முல்தானை வீழ்த்தி பெஷவார் அணி த்ரில் வெற்றி!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
பாகிஸ்தான் சூப்பர் லிக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று(பிப்.23) நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தன. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் பாபர் ஆசாமுடன் இணைந்த ஹசிபுல்லா கான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Trending
அதன்பின் 31 ரன்கள் எடுத்த நிலையில் பாபர் ஆசாமும், 37 ரன்கள் எடுத்த நிலையில் ஹசீபுல்லா கானும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதையடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 19 ரன்களுக்கும், பால் வால்டர் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ரோவ்மன் பாவெல் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என் 23 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஆசிஃப் அலியும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் லுக் வுட் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான பினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் டேவிட் வில்லி, முகமது அலி மற்றும் உசாமா மிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த யசிர் கான் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யசிர் கான் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மாலன் அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் மாலன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரீஸா ஹென்றிக்ஸும் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய குஷ்தில் ஷா, உசாமா மிர், டேவிட் வில்லி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விகெட்டை இழக்க, மறுமுனையில் அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய இஃப்திகார் அஹ்மத் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் முல்தான் அணிக்கு கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த பந்தை எதிர்கொண்ட தஹாரி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடில் முல்தான் சுல்தான்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களை மட்டுமே எடுத்தது. பெஷாவர் அணி தரப்பில் ஆரிஃப் யாக்கோப் 3 விக்கெட்டுகளையும், லுக் வுட், நவீன் உல் ஹக், சல்மான் இர்ஷத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு பிஎஸ்எல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now