
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற16ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி பேட்டிங்கைத் தொடர்ந்த கராச்சி கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷான் மசூத் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அதிரடியாக தொடங்கிய டிம் செய்ஃபெர்ட் 21 ரன்களிலும், அடுத்து வந்த சோயப் மாலிக் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் வின்ஸ் - முகமது நவாஸ் இணை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயார்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வின்ஸ் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து 28 ரன்கள் எடுத்திருந்த முகமது நவாஸும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் அணியின் நம்பிக்கையாக கீரென் பொல்லார்ட் 13 ரன்களுக்கும், இர்ஃபான் கான் 15 ரன்களுக்கும் என நடையைக் கட்டினர்.