
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கராச்சியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல் பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர் ஆண்ட்ரிஸ் கஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் - காலின் முன்ரோ இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தில் வெளிப்படுத்திய சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் கடந்த நிலையில், 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காலின் முன்ரோ 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷதாப் கான் 14 ரன்களுக்கும், ஆசாம் கான் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஹைதர் அலி 33 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 32 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களைக் குவித்தது. முல்தான் சுல்தான்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி, உசமா மிர், முகமது ஹஸ்னைன், உபைத் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.