
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் யஷிர் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். இதில் யசிர் கான் 29 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியாதுடன் அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் 9 ரன்களுக்கும், இஃப்திகார் அஹ்மத் 10 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த உஸ்மான் கானும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் காம்ரன் குலாம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13 ரன்களைச் சேர்க்க முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் ரைலி மெரிடித், ஜேசன் ஹோல்டர், முகமது நவாஸ், ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.