
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுனைடெட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் தொடக்க வீரர் ஆண்ட்ரிச் கஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் காலின் முன்ரோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்த இரண்டாவது விக்கெட்டிற்கு 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய காலின் முன்ரோ 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாஹிப்சதா ஃபர்ஹான் சதமடித்து மிரட்டியதுடன், 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் அசாம் கான் 16, சல்மான் அலி ஆகா 30, ஜேசன் ஹோல்டர் 20, பென் துவார்ஷூயிஸ் 18 ரன்களைச் சேர்க்க, இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களைக் குவித்தது. பெஷாவர் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப், ஹுசைன் தாலத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.