
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கராச்சியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - கேப்டன் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை வழங்கிய நிலையில், டேவிட் வார்னர் 31 ரன்களிலும், டிம் செஃபெர்ட் 27 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய முகமது ரியாஸுல்லா 6 ரன்னிலும், குஷ்தில் ஷா ஒரு ரன்னிலும், இர்ஃபான் கான் 17 ரன்னிலும், முகமது நபி 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜேம்ஸ் வின்ஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தியதுடன் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 70 ரன்களைச் சேர்த்தார். இதனமூலம் கராச்சி கிங்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. கிளாடியேட்டர்ஸ் தரப்பில் முகமது அமீர், ஆலி மஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடியா குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஃபின் ஆலன் 6 ரன்னிலும், ஹசன் நவாஸ் ஒரு ரன்னிலும், குசால் மெண்டிஸ் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.