இந்திய அணியின் தடுப்புச்சுவர் புஜாராவின் அறியப்படாத சாதனைகள்!
அனைத்து வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ள சட்டேஷ்வர புஜாரா படைத்துள்ள சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்,

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் சட்டேஷ்வர் புஜாரா. இந்திய அணிக்காக பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், நேற்றைய தினம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்திய அணிக்காக கிட்டத்திட்ட 20 ஆண்டுகாலம் விளையாடியுள்ள புஜரா, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்களையும், 35 அரைசதங்களையும் விளாசி 7,195 ரன்களைச் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட பந்துகளை விளையாடிய சாதனையையும் படைத்துள்ளார். மேலும் தனது வாழ்க்கையில் 11 SENA டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார், வேறு எந்த இந்தியரும் அதைச் செய்ததில்லை.
இந்தியாவுக்காக அதிக முதல் தர சதங்களைப் பெற்றவர்களைப் பொறுத்தவரை, அவர் சச்சின் டெண்டுல்கர் (81), சுனில் கவாஸ்கர் (81) மற்றும் டிராவிட் (68) ஆகியோருக்கு அடுத்து நான்காம் இடத்தை பிடித்துள்ளார். அவர் தனது முதல் தர வாழ்க்கையில் 66 சதங்களை அடித்தார். இருப்பினும், சட்டேஷ்வர் புஜாரா படைத்த சில கேள்விப்படாத சாதனைகள் குறித்து நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
சவுராஷ்டிராவுக்காக முதல் டி20 சதம்
சவுராஷ்டிராவுக்காக டி20 சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் எனும் சாதனையை புஜாரா படைத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு இந்த சாதனையை படைத்தார். அதன்படி, 2019 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ரயில்வேஸுக்கு எதிரான போட்டியில், புஜாரா 61 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 100 ரன்கள் எடுத்தார். புஜாரா விளையாடிய 71 டி20 போட்டிகளில் இதுவே அவரின் ஒரே சதம்.
லிஸ்ட் ஏ பிரிவில் விராட் கோலியை விட சராசரி அதிகம்
புஜாராவின் முதல் தர கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் அதிகம் பேசப்பட்டன. ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சராசரி விராட் கோலியை விட அதிகமாக உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? லிஸ்ட் ஏ பிரிவில் புஜாரா 57.01 சராசரியுடன் 5,759 ரன்கள் எடுத்துள்ளார், இது இந்த வடிவத்தில் குறைந்தது 5000 ரன்கள் எடுத்த அனைத்து ஆசிய பேட்ஸ்மேன்களிலும் சிறந்தது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் மட்டுமே அவரை விட முன்னணியில் உள்ளார். அதேசமயம் விராட் கோலியின் சராசரி 56.81 ஆகும், மேலும் அவர் புஜாராவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது,
முதல் முற்சதம்
தனது டெஸ்ட் அறிமுகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 2008 இல் முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் முற்சதத்தை புஜாரா விளாசினார். ராஜ்கோட்டில் நடைபெற்ற ஒடிசாவுக்கு எதிரான போட்டியில், புஜாரா ஆட்டமிழக்காமல் 302 ரன்கள் எடுத்தார். மேலும் ஐந்தாவது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து 520 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார். இது முதல் தர கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு, புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் மேலும் இரண்டு மூன்று சதங்களை அடித்தார். அதில் ஒன்று இந்தியா ஏ அணிக்காக ஏ-லெவல் போட்டியில் வந்தது. இதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் எந்த நாட்டின் 'ஏ' அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் போது முற்சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். 2013 இல் ஹூப்ளியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
ஐந்து நாள் பேட்டிங்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்த 13 வீரர்களில் புஜாராவும் ஒருவர். 2017 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையைச் செய்தார். ஆனால், இந்த 13 வீரர்களின் பட்டியலில் புஜாரா மட்டுமே ஒரே இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த டெஸ்ட் போட்டியில் அவர் மொத்தமாக 75 ரன்களை மட்டுமே எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யு19 உலகக் கோப்பையில் சிறந்த ஆட்டம்
Also Read: LIVE Cricket Score
கடந்த 2006ஆம் ஆண்டு யு19 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்த புஜாரா, இலங்கையில் நடைபெற்ற தொட்ரில் மொத்தமாக 349 ரன்களை எடுத்ததுடன், தொடர் நாயகனாகவும் இருந்தர். மேலும் இந்த தொடரில் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அவருடன் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now