
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் பல்லேகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்காவின் அபாரமான இரட்டை சதத்தின் மூலம், 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 381 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிஷங்கா 20 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 210 ரன்களை விளாசினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியில் முகமது நபி, அஸ்மதுல்லா ஒமார்ஸாய் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 50 ஓவரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதன்மூலம் இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் இரட்டை சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய பதும் நிஷங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இப்போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் படைத்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பாதிவானது.