
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நடப்பு சீசனின் 31ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருந்தாலும் இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் டெத் ஓவரின்போது அம்பயர் மேற்கொண்ட தவறான முடிவை கண்ட கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை பெங்களூரு பவுலர் ஹேசல்வுட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை அவர் வொய்ட் (Wide) லைனுக்கு வெளியே செல்லும் வகையில் சற்றே அகலமாக வீசியிருந்தார். இருந்தாலும் அதனை வொய்ட் என அறிவிக்க மறுத்தார் கள நடுவர். அதனைப் பார்த்து ஸ்ட்ரைக்கில் இருந்த ஸ்டாய்னிஸ் விரக்தி அடைந்தார். பந்து வீசுவதற்கு முன்னர் ஸ்டாய்னிஸ் நகர்ந்து வந்த காரணத்தால், அவர் விளையாட முடியாத வகையில் பந்தை சற்றே அகலமாக வீசியிருந்தார் ஹேசல்வுட்.
அதனைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் விரக்தியும் அடைந்திருந்தனர். அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்திருந்தார் ஸ்டாய்னிஸ். கிட்டத்தட்ட ஆட்டத்தின் முடிவை அது மாற்றியதாகவே சொல்லப்பட்டது.