
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட்டு, தற்போது டி20 போட்டியில் விண்டீஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியிடம் படுதோல்வியைச் சந்தித்த விண்டீஸ் அணி, டி20 தொடரில் மாஸ் காட்டி வருகிறது.
முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்த விண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி கயானா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், சார்லஸ் போன்ற வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், நிக்கோலஸ் பூரன் (67) மற்றும் கடைசி நேரத்தில் களமிறங்கிய பந்துவீச்சாளர்களின் பயம் இல்லாத பேட்டிங்கின் மூலம் 18.5 ஓவரில் இலக்கை எட்டிய விண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.