
தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் டிஎன்பிஎல் தொடரில் நன்றாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தேர்வான அவர், கடந்த் ஐபிஎல் சீசன் இறுதி போட்டியில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். அதன்பின் இலங்கையில் நடைபெற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்று பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றி பெற வைத்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளூர் தொடர்களிலும் அசத்திய அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தின் கவுண்டி தொடரிலும் சர்ரே அணிக்காக நன்றாக விளையாடினார். இப்படி கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அசத்தியதால் தங்களது கதவை தட்டிய அவரை இந்திய தேர்வுக் குழுவினர் முதல் முறையாக தேர்ந்தெடுத்துள்ளனர். இருப்பினும் நிறைய போட்டி மிகுந்த இந்திய அணியில் அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.