
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 22 ரன்களைச் சேர்த்திருந்த சுஜயும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய முகிலேஷ் ரன்கள் ஏதுமின்றியும், சாய் சுதர்ஷன் 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 81 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ராம் அரவிந்த் - அதீக் உர் ரஹ்மான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.
இருவரும் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அதீக் உர் ரஹ்மான் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கானும் 3 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ராம் அரவிந்தும் 27 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த முகமது மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், ஓரளவு ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர்.