தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் பாபா அபாரஜித்தை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபா அபாரஜித் 72 ரன்களைச் சேர்த்தார். திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரர் விமல் குமார் 3 ரன்கள் மட்டுமெ எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த ஷிவம் சிங் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை அதிரடியாக விளையாடியதுடன், தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், ஷிவம் சிங் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 64 ரன்களைச் சேர்க்க, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.