
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசியக்கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டபோது கேஎல் ராகுல் தலைமையிலான மற்றொரு இந்திய அணியானது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. அந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் லக்ஷ்மண் இந்திய அணியுடன் பயணித்திருந்தார். ஆசியக் கோப்பை தொடருக்காக தயாராகும் வகையில் இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் டிராவிட்க்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டிராவிடுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்த வேளையில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படும் சில தினங்களுக்கு முன்னதாக டிராவிடுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியுடன் டிராவிட் பயணிக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் காரணமாக ஜிம்பாப்வே தொடரை முடித்த கையோடு விவிஎஸ் லக்ஷ்மண் தற்காலிக இந்திய அணியின் பயிற்சியாளராக ஆசிய கோப்பை தொடரிழும் இந்திய அணியுடன் தொடர்வார் என்றும் டிராவிட்டுக்கு கரோனா தொற்று குணமடைந்ததும் அவர் இந்திய அணியுடன் இணைவார் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது.