
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அப்படி விராட் கோலி இந்திய அணியின் மூன்று வகையான கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறிய பின்னர் இந்திய அணிக்கு புதிய கேப்டனாக அனுபவ வீரரான ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.
ரோஹித்தின் தலைமையில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் வேளையில் அவரது தனிப்பட்ட பேட்டிங் பார்ம் மோசமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர் மீது கடந்த சில மாதங்களாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதோடு நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 10 ஆவது இடத்தினை பெற்று வெளியேறி உள்ளதால் தற்போது ரோஹித் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக அவர் விளையாடி வருவதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.