இத்தொடரில் இடம்பிடித்துள்ள அனைவரும் திறமையானவர்களே - ராகுல் டிராவிட்
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் அனைவரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க தகுதியானவர்கள் தான் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணியில் நான்கு வீரர்கள் அறிமுக வீரர்கள் களமிறங்கினர். அதன்படி துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், மூன்றாவது வீரராக தேவ்தத் படிக்கல், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நிதீஷ் ராணா மற்றும் பந்து வீச்சாளர்களில் சேத்தன் சக்காரியா ஆகியோர் நேற்று இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகினர்.
இந்நிலையில் தொடர்ந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “இலங்கை தொடருக்கான அனைத்து வீரர்களுமே மிக திறமையான வீரர்கள் தான். எல்லோரும் அவர்களது திறனை சரியான இடத்தில் நிரூபித்து தான் இந்த வாய்ப்பை பெற்று உள்ளார்கள்.
Trending
20, 25 பேர் கொண்ட குழுவில் 11 பேர் விளையாடுவது என்பது திறமைக்கான பரிசு. அதனால் கிடைக்கும் வாய்ப்பை யாரும் தவற விடாமல் சிறப்பாக விளையாட வேண்டும். இதுவரை இந்திய அணி விளையாடிய விதம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. ஒருநாள் போட்டியின் போது முதல் இரண்டு ஆட்டங்களையும் நாங்கள் கைப்பற்றி இருந்ததால் மூன்றாவது போட்டியில் சில வீரர்களுக்கு அறிமுகம் வாய்ப்பை வழங்கினோம்.
ஆனால் தற்போது டி20 தொடரை பொறுத்தவரை தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே பல புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் அவர்களும் திறமையான வீரர்கள் தான். இங்கு வந்திருக்கும் அனைத்து வீரர்களும் பிளேயிங் லெவனில் விளையாட தகுதியான வீரர்கள் என்பதாலேயே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now