
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இத்தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளீட்டோரையும் பங்கேற்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் துலீப் கோப்பை உள்ளூர் தொடருக்கான அணிகள் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீம் ஏ, டீம் பி, டீம் சி மற்றும் டீம் டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் டீம் ஏ அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லும், டீம் பி அணியின் கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரும், டீம் சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டீம் டி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்ம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.