இதுபோன்று தொடர்ச்சியாக போராடுவோம் - சஞ்சு சாம்சன்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கமளித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெடுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளம் துவக்க வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால். இவர் வெறும் 62 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்து 124 ரன்கள் குவித்திருந்தார்.
இதனையடுத்து இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இசான் கிசன் 28 ரன்கள், கிரீன் 44 ரன்கள் அடித்து நல்ல ஆரம்பம் அமைத்துக்கொடுத்தனர். மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் 29 பந்துகளில் 55 ரன்கள் விளாசி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துச் சென்றார். கடைசியில் வந்த டிம் டேவிட் 14 பந்துகளில் 45 ரன்கள் விளாசி மொத்தமாக ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வெற்றியுடன் முடித்துவிட்டார். 19.3 ஓவர்களில் 214/4 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
Trending
போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், “சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தபோது இடைவேளை நேரத்தில் அவருக்காக திட்டமிட்டோம். பின்னர் வந்த டிம் டேவிட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்றுவிட்டார். வெற்றி பெற வேண்டும் அல்லது ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதல்ல எங்களது அணுகுமுறை.
வெற்றி தோல்வி இங்கும் அங்கும் வந்து செல்லும். எங்களது கவனம் எல்லாம் போட்டியில் என்ன வெளிப்படுத்துகிறோம் என்பது தான். என்னென்ன விஷயத்தை எங்களது கட்டுக்குள் கொண்டு வர முடியுமோ அதில் கவனம் செலுத்துவோம். இதுபோன்று தொடர்ச்சியாக போராடுவோம். ஜெய்ஸ்வால் இடம் இதுபோன்ற ஆட்டத்தை எதிர்பார்த்தேன். கடந்த போட்டியில் கூட 70 ரன்கள் அடித்தார். விரைவாக சதம் வரப்போகிறது என்கிற எண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now