
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த ஆண்டு நவம்பர் 24, 25ஆம் தேதி சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏல்ம் நடத்தப்பட்டது. இதனால் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.
அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. மேலும் 13வயதே ஆன இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் விளையாடும் வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.