1-mdl.jpg)
2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி நிறைய தோல்விகளை சந்தித்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதன்பின் பாகிஸ்தான் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர் போட்டிகளில் தோற்ற அந்த அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும், துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் இறுதிப்போட்டிகளில் தோற்றது.
இந்த அனைத்து தோல்விகளுக்கும் சுமாரான பிட்ச் உருவாக்கியது முதல் சொதப்பலான அணி தேர்வு செய்தது வரை கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான் வாரிய தலைவராக பொறுப்பேற்ற ரமீஷ் ராஜா முக்கிய காரணமாக அமைந்ததால் கடந்த வாரம் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க உங்களது நாட்டுக்கு வர முடியாது என்று ஜெய் ஷா தெரிவித்த நிலையில் எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்கள் நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பையில் பங்கேற்கும் நாங்களும் வரமாட்டோம் என்று அவர் பேசியது மேலும் சர்ச்சையை கிளப்பியது.
அத்துடன் பணக்கார இந்தியாவை முதல் முறையாக உலகக் கோப்பையில் தோற்கடித்தோம், பாகிஸ்தான் பங்கேற்காமல் போனால் 2023 உலக கோப்பையை யார் பார்ப்பார் என கடந்த சில மாதங்களில் அவர் இந்தியாவை ஏராளமாக விமர்சித்து ரசிகர்களின் அதிருப்தியை வாங்கி கட்டிக்கொண்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் வாரியம் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் யூடியூப் பக்கத்தில் விமர்சகராக மாறியுள்ளார்.