
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் விதர்பா அணிகள் முன்னேறின. அதன்படி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் முதல் இன்னிங்ஸில் 224 ரன்களிலும், பின்னர் களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 105 ரன்களிலும் ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் முஷீர் கான், கேப்டன் அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் முஷீர் கான் 136 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 96 ரன்களையும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 73 ரன்களையும் சேர்க்க மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 418 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் ஹர்ஷ் தூபே 5 விக்கெட்டுகளையும், யஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் விதர்பா அணி வெற்றிக்கு 538 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.