
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்நிலையில், பி -பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு – அஸாம் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த 17 ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் என் ஜெகதீசன் 125 ரன்களும், பிரதோஷ் பால் 153 ரன்களும், விஜய் சங்கர் 112 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்சிஸ் முடிவில் தமிழ்நாடு அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 540 ரன்கள் எடுத்தது. அஸாம் அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய அஸாம் அணி முதல் இன்னிங்சில் 266 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக புர்காயஸ்தா 74 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு தரப்பில் எஸ் அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியார் மற்றும் திரிலோக் நாக் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.