
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசம்-பெங்கால் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் இந்தூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பெங்கால் அணி 438 ரன்னும், மத்தியபிரதேச அணி 170 ரன்னும் எடுத்தன. 268 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3ஆவது நாளில் 2 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்து இருந்தது. சுதீப் குமார் கராமி 12 ரன்னுடனும், அனுஸ்டப் மஜூம்தார் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
4ஆவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்து 547 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதிகபட்சமாக அனுஸ்டப் மஜூம்தார் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பிரதிப்தா பிராம்னிக் 60 ரன்னுடன் களத்தில் உள்ளார். மத்தியபிரதேசம் தரப்பில் சரன்ஷ் ஜெயின் 6 விக்கெட்டும், குமார் காத்திகேயா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதையடுத்து இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேச அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டத்தொடங்கியது. இதில் ராஜத் படிதார் அரைசதம் கடக்க, மற்றவீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 39.5 ஓவர்களில் மத்திய பிரதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.