
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி தேவ்தத் படிக்கல்லின் அபாரமான சதத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்தது. இதைத்தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தேவ்தத் படிக்கல் 151 ரன்களுடனும், ஹர்திக் ராஜ் 35 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் படிக்கல் மேற்கொண்டு ரன்கள் ஏதும் எடுக்காமல் 151 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்த ஹர்திக் ராஜ் 51 ரன்களிலும், ஸ்ரீனிவாஸ் ஷர்த் 45 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, கர்நாடகா அணி 366 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், முகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.