
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற எலைட் குரூப் சி பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டியில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேலம் கிரிக்கெட் மைத்தானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் - நாராயண் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 10 ரன்கள் மட்டும் எடுத்திருந்த லோகேஷ்வர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பாலும் 20 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாராயண் ஜெகதீசன் 22 ரன்களிலும், முகமது அலி 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - விஜய் சங்கர் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.