
இந்தியாவின் பாரம்பரிய மிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், ஜெகதீசன் 23, அபரஜித் 8, இந்திரஜித் 9 ஆகியோர் சொதப்ப, மிடில் ஆர்டரில் பிரதோஷ் பால் மட்டுமே அரைசதம் அடித்தார். பிரதோஷ் பால் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் வெறும் 144 ரன்களுக்கு தமிழ்நாடு அணி ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் அபாரமாக விளையாடி சதமடித்தார். மிகச்சிறப்பாக விளையாடி பெரிய இன்னிங்ஸ் ஆடிய சர்ஃபராஸ் கான் 162 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் தனுஷ் கோட்டியான் 71 ரன்களும், மோஹித் அவஸ்தி 69 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 481 ரன்களை குவித்தது.