
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணிக்கு ரவிகுமார் சமர்த் - கேப்டன் மயங்க் அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மயங்க் அகர்வால் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சமர்த்துடன் இணைந்த தேவ்தத் படிக்கல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த ரவிக்குமார் சமர்த் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிகின் ஜோஸ் 13 ரன்களுக்கும், மனிஷ் பாண்டே ஒரு ரன்னிலும், கிஷான் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்தியதுடன் 150 ரன்களையும் சேர்த்தார்.