
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் விதர்பா அணிகள் முன்னேறின. அதன்படி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா 46 ரன்களையும், புபென் லால்வானி 37 ரன்களையும் சேர்த்து தொடக்கம் கொடுத்த நிலையில் அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 75 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த விதர்பா அணியானது மும்பை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் குறிப்பாக முக்கிய வீரர்கள் கருண் நாயர், துருவ் ஷோர்வ், யாஷ் ரத்தோட் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் விதர்பார் அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் தவால் குல்கர்னி, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்யான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.