
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் 5ஆவது சுற்று ஆட்டத்தில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் ரயில்வேஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணியில் கேப்டன் பிரதாம் சிங் ஒரு ரன்னிலும், விவேக் சிங் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சுராஜ் அவுஜா 52, சைஃப் 6, மெராய் 53 ரன்களைச் சேர்க்க ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஷாருக் கான் - ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 86 ரன்களில் ஷாருக் கானும், 56 ரன்னில் ஜெகதீசனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 11 ரன்களுக்கும், பிரதோஷ் பால் 38 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர்.